

கோவை: வாக்களிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் காரை திமுகவினர் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக பாஜக - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் 9-வது வீதியில் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிப்பதற்காக தன்னுடைய காரில் வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த திமுகவினர் சிலர், அவருடைய கார் மற்றும் அவரையும் சேர்த்து வீடியோ எடுத்தனர். இதற்கு வானதி சீனிவாசன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் வாக்களித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் .
இந்த நிலையில், அவருடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரிகிரீஸ், வீடியோ எடுத்த திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர் .