திருச்சியில் வாக்குச்சாவடி மாறி வாக்களித்த திமுக வேட்பாளர் - கள்ள வாக்குச் செலுத்தியதாக பிற வேட்பாளர்கள் போராட்டம்

திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி
திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி
Updated on
2 min read

திருச்சி: திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் திமுக சார்பில் பா.மஞ்சுளாதேவி, அதிமுக சார்பில் வி.ராஜலட்சுமி, தேமுதிக சார்பில் செ.சர்மிளா, பாஜக சார்பில் சத்தியகலா, நாம் தமிழர் கட்சி சார்பில் ரா.பாண்டிமீனா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொ.சவுந்தர்யா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மு.யோகலட்சுமி, பெ.கவிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலை கலிங்கப்பட்டி புதுத்தெரு 2-வது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி (54), கருமண்டபம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 647-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். ஆனால், அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ளதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வெளியே வந்து பிற கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் தனது வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று விசாரித்தபோது, முத்துலட்சுமியின் வாக்கை திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி வாக்குச்சாவடி மாறி வந்து செலுத்தியிருந்ததையும், அதைத் தொடர்ந்து, தனது வாக்கு உள்ள 646-வது வாக்குச்சாவடியிலும் வாக்குச் செலுத்தியிருந்ததையும் கண்டுபிடித்தனர்.

திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி மற்றும் வாக்காளர் முத்துலட்சுமி ஆகிய இருவரின் வாக்குகளும் இரு வேறு வாக்குச்சாவடிகளில் உள்ள நிலையில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இருவரது பெயர்களும் 673 என்ற ஒரே வரிசை எண்ணில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் 646, 647 ஆகிய இரு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும், கள்ள வாக்கு செலுத்திய மஞ்சுளாதேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வாக்குச்சாவடி மைய நுழைவுவாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போலீஸார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். மேலும், வாக்கு பறிபோன முத்துலட்சுமிக்கு டெண்டர் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, அவர் தனது வாக்கைக் செலுத்தி விட்டுச் சென்றார்.

இதுதொடர்பாக திமுக வேட்பாளர் பா.மஞ்சுளாதேவியைத் தொடர்புகொண்ட போது, அவரது வழக்கறிஞர் முருகவேல் பேசினார். அவர் கூறும்போது, "மஞ்சுளாதேவி வாக்குச் செலுத்திய பிறகே அவர் பெயர் வேறு பாகத்தில் இருப்பதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். வாக்குச்சாவடி அலுவலர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம்" என்றார்.

இந்த நிலையில், "கள்ள வாக்கு செலுத்திய மஞ்சுளாதேவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாநகர காவல் ஆணையருக்கு முத்துலட்சுமியும், "மஞ்சுளாதேவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தேமுதிக வேட்பாளர் சர்மிளா மாவட்ட ஆட்சியருக்கும், "646, 647 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்" என்று சுயேச்சை வேட்பாளர் கவிதா மாநகராட்சி ஆணையருக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in