Published : 19 Feb 2022 10:55 AM
Last Updated : 19 Feb 2022 10:55 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் வெறும் 3.9% வாக்குப்பதிவு | மாவட்ட வாரியாக காலை 9 மணி நிலவரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மிக மந்தமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மிக மிகக் குறைவாக வெறும் 3.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிகுமார், "தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவாகியுள்ளது. மாநகராட்சித் தேர்தலில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில் 11.74% என்று பதிவாகி மொத்தமாக சராசரியாக 8.21% வாக்குப்பதிவாகியுள்ளது.

சென்னையில் வெறும் 3.96% மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், இனி வாக்குப்பதிவு சூடு பிடிக்கும். மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருவோருக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

கோவையில் இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக தாமதமாக தேர்தல் தொடங்கியுள்ளது. அங்கு, வாக்களிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கும் திட்டம் ஏதுமில்லை. வாக்குச்சாவடிகளுக்கு அருகே பணப்பட்டுவாடா செய்ததாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

9 மணி வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட வாரியாக:

வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் தலைநகர் சென்னையில் தான் மிக மிகக் குறைவான அளவில் வாக்குப்பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முன்னதாக, இன்று காலை 9.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x