வேலூர், ராணிப்பேட்டையில் ஆர்வத்துடன் வாக்களித்த இளம் வாக்காளர்கள்

படங்கள்: வி.எம்.மணிநாதன்
படங்கள்: வி.எம்.மணிநாதன்
Updated on
2 min read

வேலூர்/ராணிப்பேட்டை: வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகள் என 180 வார்டுகளுக்கான தேர்தலில் 178 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் 7, 8-ம் வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் களத்தில் 819 வேட்பாளர்கள் உள்ளனர். சுமார் 5.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தமுள்ள 628 வாக்குச்சாவடிகளில் 87 பதற்றமானவை. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,320 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நேரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட 13 அதிவிரைவு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காட்பாடி டான்போஸ்கோ பள்ளியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 288 வார்டுகளில் சுமார் 3.34 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2 நகராட்சி, 2 பேரூராட்சி வார்டுகளில் என 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 284 வார்டுகளில் 1071 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 411 வாக்குச்சாவடிகளில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மொத்தம் 960 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்துச் சென்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், மாலை 5 மணிக்கு பிறகு 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in