கீரனூரில் எங்கள் சின்னம் அச்சிடப்படாதது ஏன்? - மநீம கொந்தளிப்பு

கீரனூரில் எங்கள் சின்னம் அச்சிடப்படாதது ஏன்? - மநீம கொந்தளிப்பு
Updated on
1 min read

கீரனூர்: கீரனூர் பேரூராட்சியில் வார்டு எண் 5-இல் மக்கள் நீதி மய்யம் சின்னம் அச்சிடப்படாதன் பின்னணி குறித்து அக்கட்சி கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் வார்டு எண் 5-இல் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மு.சித்ராவின் பெயருக்கு அருகில் சின்னம் வடிவில் 'டார்ச் லைட்' குறிப்பிடப்படாமல் எழுத்து வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வேட்பாளரின் அடிப்படை உரிமையை மறுக்கும் பாரபட்ச செயல். அரசியல் கட்சியின் அடையாளத்தை மறைக்க முயற்சிக்கும் செயல். வாக்காளர்களை குழப்ப வழிவகுக்கும் செயல். இதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இதனை சரி செய்து டார்ச் லைட் சின்னத்துடன் (மின்கல விளக்கு) கூடிய வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் வாக்கு எந்திரத்திலும், சுவரொட்டிகளிலும் இடம் பெற்றுள்ளதை மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு துவங்கும் முன் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் தவறு நிகழ்ந்துள்ள பூத்துகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in