Published : 08 Apr 2016 08:29 AM
Last Updated : 08 Apr 2016 08:29 AM

தேர்தலில் பண விநியோகத்தை தடுக்க தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை

தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் இணை தேர்தல் ஆணையர்களை கொண்ட குழு, தேர்தல் பணிகளை பார்வையிடுவதற் காக நேற்று முன்தினம் சென்னை வந்தது.

இதையடுத்து நேற்று மாலை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

அரசு அதிகாரிகள் அ.தி.மு.கவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். தி.மு.கவினர் மீது மட்டும் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஊடகங்களில் அ.தி.மு.கவினர் பணம் கடத்து வதாக வந்த தகவல் குறித்து தமிழக தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன், தேர்தல் பிரிவு உறுப்பினர் பாலச்சந்திரன்

பொதுக்கூட்டங்கள் பேரணிகளுக்கான அனுமதி பெறும் காலக் கெடுவை 24 மணி நேரமாக குறைக்க வேண்டும். சில தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்களை விமர்சித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றை ஒளிபரப்பக் கூடாது.

மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவப்படையினரை கூடுதலாக ஈடுபடுத்த வேண்டும். அரசுத்துறை வாகனங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பண விநியோகத்தை தடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி

கட்சிகளின் உள்ளரங்க கூட்டங்களில் காவல்துறை, தேர்தல் துறை அதிகாரிகள் வருவது தவிர்க்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள பார்களை மூட வேண்டும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.ஜோதி

புதிதாக பதிவு செய்துள்ள 1.5 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்று உறுதி அளிக்கப்படவில்லை என தெரிவித்தோம். இந்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தனர்.

தேமுதிக மாநில செயலாளர் ரவீந்திரன்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் ஏற்க வேண்டும் என்று தெரிவித்தோம்.

அதிமுக சார்பில் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் எம்.பி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் பாமக சார்பில் முன் னாள் அமைச்சர் வேலுவும் கலந்து கொண்டார்,

கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிர்லோஷ்குமார், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் அஜய் யாதவ், சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x