Published : 19 Feb 2022 07:26 AM
Last Updated : 19 Feb 2022 07:26 AM

கரோனா பரிசோதனையை குறைக்க அறிவுறுத்தல்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சுதந்திர போராட்ட வீரர் ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலரின் 163-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: கரோனா தொற்று பரிசோதனையை படிப்படியாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

‘‘கரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டும். தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய வேண்டாம்’’ என்று மத்திய அரசு கூறியுள்ளது. யார் யாருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு 17-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சளி, காய்ச்சல்போன்ற உபாதைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்யப்படாது.

தொற்று எண்ணிக்கை குறைகிறது

தொற்று எண்ணிக்கை மளமளவென குறைவதால், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமற்றது. தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேல் எடுக்கப்பட்டு வந்த பரிசோதனைகள் 80 ஆயிரம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பரிசோதனைகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை உடனே தொடங்குமாறு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். மக்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x