

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என மாநிலதேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை அளித்த விளக்கத்தையேற்ற சென்னை உயர் நீதிமன்றம், கோவைக்கு துணை ராணுவ பாதுகாப்பு கோரிய வழக்குகளை முடித்து வைத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் கோவையில் போட்டியிடும் ரகுபதி மற்றும் வாக்காளரான முருகேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19 (இன்று) நடைபெறவுள்ள நிலையில், கோவையில் கடந்த 10 நாட்களாக ஆளுங்கட்சியினர் கட்டுக்கடங்காத விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் எப்படியாவது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும்கட்சியான திமுக கலவர பூமியாக மாற்றி வருகிறது. திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாததும் போல் உள்ளனர். வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி சார்பில் பரிசுப்பொருட்களும் பணமும் சரளமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டிய மாநில தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருந்து வருகிறது. தேர்தல் நாளன்று பல்வேறு முறைகேடுகளிலும், ஜனநாயக விரோத போக்குகளிலும் ஆளுங்கட்சியினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு துணை ராணுவப்படையின் பாதுகாப்பு அளிக்கவும், அனைத்து நடைமுறைகளையும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக நேற்று நடந்தது. அப்போதுமனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத்துராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி,நவீன்குமார் மூர்த்தி ஆகியோர்ஆஜராகி, ‘‘ஆளுங்கட்சியானதிமுக, கோவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி முறைகேடு செய்ய வேண்டும் என்பதற்காகவே கரூர் மற்றும் சென்னையில் இருந்து தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்களை இறக்குமதி செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கைஇல்லை’’ என குற்றம் சாட்டப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, உயர் நீதிமன்றம்ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி இந்த தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
29 இடங்கள் பதற்றமானவை
தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் தமிழக டிஜிபி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘கோவையில் 29 இடங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. 1,200 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ராணுவப் படையை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. கோவையைப் பொருத்தமட்டில் அதிவிரைவுப்படை பணியமர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசி, தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவப்படையின் உதவி கோரப்படும் என்றனர்.
அதையேற்ற நீதிபதிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே இந்தவழக்கில் மேற்கொண்டு எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி வழக்குகளை முடித்து வைத்துள்ளனர். அதேபோல இன்று (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.