Published : 19 Feb 2022 07:55 AM
Last Updated : 19 Feb 2022 07:55 AM
சென்னை: சென்னையில் உள்ள கலைப்பொருட்கள் அங்காடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோக நடராஜர் மற்றும் கிருஷ்ணர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பவுத்த மத மந்திரங்கள் அடங்கிய பேழைகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள கலைப்பொருட்கள் அங்காடி ஒன்றில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையிலான போலீஸார், அங்காடியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 2 அடி உயரம் கொண்ட திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோக சிலை, 1 அடி உயரம் உள்ள நடராஜர் உலோக சிலை, 1 அடி உயரம் உள்ள கிருஷ்ணர் உலோக சிலை மற்றும் பவுத்த மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்து பிரதிகளுடன் கூடிய 11 பேழைகள் இருந்தன.
இதுகுறித்து அங்காடி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தபோது அவை எப்போது, எவர் மூலம், எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பது குறித்த விவரங்கள் அவர்களிடம் இல்லை.
மேலும், அவர்களிடம் சட்டப்பூர்வமான செல்லத்தக்க ஆவணங்களும் இல்லை. இதையடுத்து இந்த சிலைகளும், பேழைகளும் ஏதேனும் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்பதை உறுதி செய்த போலீஸார், அவற்றை பறிமுதல் செய்தனர்.
எங்கு திருடியவை?
இவற்றின் தொன்மை மற்றும் மதிப்பு குறித்து வல்லுநர்களிடம் கருத்துரை பெற்று, சம்பந்தப்பட்ட சிலைகள் மற்றும் ஆவணங்கள் எந்த கோயில்கள், மடாலயங்களில் இருந்து திருடி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிலைகள் உள்ளிட்டவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT