

சென்னை: முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக உரிமையை முதல்வர் நிலைநாட்ட வேண்டும்என்று ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கான அனுமதியை கேரளாவுக்கு திமுக தயவில் இருந்த மத்திய காங்கிரஸ் அரசு அளித்தது. இதை எதிர்த்து ஒரு போராட்டத்தைக்கூட திமுக அரசால் நடத்தமுடியவில்லை. தற்போது திமுகஆட்சிக்கு வந்ததும், அணை விவகாரத்தில் பல்வேறு இடையூறுகளை கேரள அரசு கொடுக்கிறது. ஆனால், இதை எதிர்த்து திமுகவலுவாகக் குரல் கொடுக்கவில்லை. திமுகவின் மென்மையான போக்கை அறிந்து புதிய அணை கட்டப்படும் என்றும் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும் கேரள ஆளுநர்அறிவித்துள்ளார். இந்த அத்துமீறிய செயலுக்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முனைப்புடன் நடவடிக்கை எடுத்து தமிழக உரிமையை முதல்வர் நிலை நாட்டவேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: முல்லை பெரியாறில் புதியஅணை கட்ட கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பது நியாயம் இல்லை. இதில் கேரள அரசு தொடர்ந்து வீண் பிடிவாதப் போக்கை கடைபிடிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசும்வற்புறுத்த வேண்டும். மத்திய,மாநில அரசுகள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி: முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகள், கேரள பிரபலங்களின் மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், அந்த கட்டிடங்கள் நீரில் மூழ்கிவிடும். அதை தடுக்கவே, அணை நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. இந்த சூழ்ச்சிக்கு தமிழகம் ஒருபோதும் இரையாகக் கூடாது. அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று கேரள சட்டப்பேரவையில் மாநில ஆளுநர் 18-ம் தேதி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் கடந்த 2014 மே 7-ம் தேதி அளித்த தீர்ப்புக்கு முரணானது. உச்ச நீதிமன்ற ஆணையை அவமதிப்பதும் ஆகும்.
முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்ற ஆணையில் அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவை இல்லை. மேலும், புதிய அணை கட்டும் திட்டத்தைதமிழக அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாககூறியுள்ளது. இப்படியிருக்க, முல்லை பெரியாறு பகுதியில் புதியஅணை கட்டும் திட்டத்தை கேரள அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. இதை எல்லா விதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும். தமிழகம் தனது உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.