Published : 19 Feb 2022 05:44 AM
Last Updated : 19 Feb 2022 05:44 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலைபார்வையிட சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்.19-ம் தேதி(இன்று) ஒரேகட்டமாக நடக்கும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்ததேர்தலுக்காக மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 218 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு57,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
1.33 லட்சம் ஊழியர்கள்
தேர்தல் பணியில் 1 லட்சத்து33 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் 1 லட்சத்து6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள், கரோனா பாதுகாப்புக்கான கிருமிநாசினி, கையுறை உள்ளிட்ட 13 வகையான பொருட்களும் அனுப்பப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தேர்தலை அமைதியாக நடத்த 3 கம்பெனி அதிவிரைவுப் படை போலீஸாரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பொது விடுமுறை
தேர்தல் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தேர்தலை முன்னிட்டு இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளும் கடந்த 17-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு முதல்மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக நோட்டா வசதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி இல்லை. இது, யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 ஆவணங்கள்
இத்தேர்தலில் மாநில தேர்தல்ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மாலை5 மணிக்குள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்தால் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்குமேல் வரும் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்றும்,மாலை 5 முதல் 6 மணி வரைகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவைக்கு சிறப்பு பார்வையாளர்
கோவையில் தங்கியிருக்கும் வெளியாட்களை வெளியேற்றக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்க சிறப்பு தேர்தல் பார்வையாளராக நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று கூறியதாவது:
கோவையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,528 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வெளியாட்கள் தங்கி இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் மூலம் ரூ.8 கோடியே 21 லட்சம் மதிப்பு ரொக்கம், ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பு மதுபானங்கள், ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.11 கோடியே 89 லட்சம் மதிப்பு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
மொத்தம் உள்ள 30,735 வாக்குச்சாவடிகளில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கேமராக்களை நிறுவி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர் நேரடியாக நிகழ்வுகளை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளை கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு பார்வையாளர், சென்னை மாநகராட்சிக்கு 3 பார்வையாளர்கள் என 40 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 697 வட்டார பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
6 வேட்பாளர்கள் மரணம்
தேர்தல் பணிகள் நடந்து வரும் நேரத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். அதனால் 6 வார்டுகளில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில், 295 வாக்குச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT