

திமுகவும், அதிமுகவும் மதுவால் மக்களை சீரழித்துவிட்டன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக சார்பில் சைக்கிள் மூலம் தேர்தல் பிரச்சாரப் பயணம் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடந்தது. பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.
சைக்கிள் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்த இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் பாமகவினர் சைக்கிள்களில் வீதிவீதியாகச் சென்று மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்வார்கள். திமுகவும், அதிமுகவும் மதுவால் மக்களை சீரழித்துவிட்டன. தமிழகத்தில் 12 மது ஆலைகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 6 ஆலை, அதிமுகவுக்கு 3 ஆலை இருக்கிறது. படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவதாக ஜெயலலிதா சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். பாமக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.