

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 24.74 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 802 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 3,366 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.மாநகராட்சியில் 100 வார்டுகள், நகராட்சிகளில் 198 வார்டுகள், பேரூராட்சிகளில் 504 வார்டுகள் என 802 இடங்களுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநகராட்சியில் 778, நகராட்சி, பேரூராட்சிகளில் 2588 என மொத்தம் 3,366 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 லட்சத்து 74 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
வாக்குப்பதிவுக்காக மாநகராட்சி யில் 1,290 வாக்குச்சாவடிகள், நகராட்சிகளில் 390 வாக்குச்சாவடி கள், பேரூராட்சிகளில் 632 வாக்குச்சாவடிகள் என 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்,மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வின்படி, 436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார்கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்தராவ் நேற்று பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். தெற்கு உக்கடம் ஹோலி ஃபேமிலி கான்வென்ட் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையர் மோ.ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நேற்று முடிந்ததும், எந்த வாக்குச் சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
மாநகரில் 1290 வாக்குச்சாவடி களுக்கு 3,612 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,548 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5 மண்டலங்களிலும் பாதுகாப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் முன்னிலையில் நேற்று அறைகள் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலூர், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளின் வாக்குச் சாவடிகளுக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் காக, மாநகரில் காவல் ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் 2,500 போலீஸாரும், மாவட்டப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் 2 ஆயிரம் போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.