Published : 19 Feb 2022 06:00 AM
Last Updated : 19 Feb 2022 06:00 AM
காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று (பிப். 19) நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான சாதனங்கள், பொருட்கள் நேற்று அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், பெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சிகள், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்டம் முழுவதும் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குப்பதிவு மையங்களும், மாவட்டம் முழுவதும் 384 வாக்குப் பதிவு மையங்களும் உள்ளன. இதில் 88 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று வாக்குப் பதிவும், 22-ம் தேதி வாக்கு எண்ணும் பணிகளும் நடைபெற உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் 703 வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நகராட்சிகளில் 342 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 122 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அறியப்பட்டுள்ளன. இதில் 103 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 825 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் உட்பட வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருட்கள் நேற்று மதியம், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளிலிருந்து, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
அந்த வகையில், நேற்று மதியம் ஆவடி அருகே பட்டாபிராம், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியைத் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது, ஆவடி மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சரஸ்வதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT