Published : 19 Feb 2022 06:30 AM
Last Updated : 19 Feb 2022 06:30 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் 22 ஆயிரம்போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல்நடத்தை விதிகளை மீதுவோர், சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுநடக்கிறது. இதையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட 167 வார்டுகளில் 1,197 வாக்குச்சாவடிகளில் 5,013 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.இதில் 213 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 54 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டு, அங்கு அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரிஉட்பட மொத்தம் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர் தலைமையில், காவல் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும், சட்டம், ஒழுங்கு,குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகள், ஆயுதப்படை மற்றும் இதர சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஊர்க்காவல் படை மற்றும் ஓய்வு பெற்ற போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு காவலர் மற்றும் சிறப்பு காவலர்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 390 மொபைல் பார்ட்டிகளில் துப்பாக்கியுடன் ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர் பணியில் இருப்பார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய குழுவினர் பணியில் இருப்பர். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஓர் அதிவிரைவுப் படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வாக்குப்பதிவு மையங்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டத்தை நெறிப்படுத்த ஓர் உதவி ஆய்வாளர் மற்றும்4 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 72 தேர்தல் பறக்கும் படை உருவாக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல்துறையினர் 18 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படை உள்ளிட்ட காவல்துறை அல்லாதோர் 4 ஆயிரம்பேர் என மொத்தம் 22 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் அரசியல் கட்சி சார்ந்த அலுவலகமோ வாக்கு சேகரிப்போ கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சென்னை பெருநகர காவல் தேர்தல் பிரிவு எண் 044-23452437, அவசர உதவி எண்.100, சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்கள் 234352359, 23452360, 23452361, 23452377 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஈடுவோர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT