

கடலூர் மாவட்டத்தில் 400 ஊர்க்காவல் படையினர் உட்பட 2 ஆயிரம் போலீஸார் இன்று உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பகுதிகளில் காவலர்கள் பணியமர்த்தும் பணி நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எஸ்பி சக்திகணேசன் பேசுகையில், " தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிப் பகுதிகளில் முழுநேரக் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.
எல்லைகள் குறித்த பிரச்சினையை மையப்படுத்திஒதுங்குவதை தவிர்க்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அசோக்குமார் தலைமையில் 11 உதவி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், 55 ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உட்பட 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காவல் நிலைய பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.