

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ.மாணவிகள் சட்டப்பேரவையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கைளை முன்வைத்தனர். அதை ஒரு மாதத்தில் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
புதுவை காலாப்பட்டு டாக்டர்அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றமும், புதுச்சேரி பல்கலைக்கழகமும் அறிவுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தனர். முதல்வரை சந்திக்க வந்ததாக தெரிவித்தனர். அப்போது முதல்வர் அங்கு இல்லை; போலீஸார் மற்றும் சபை காவலர்கள் அதை எடுத்துக் கூறி, மாணவர்களை பேரவைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, மாணவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டனர். முதல்வர் வந்தவுடன், நேரில் பேச வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தவுடன் சட்டப்பேரவை எதிரே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் காத்திருந்தனர்.
19 பேர் இருந்த இடத்தில்...
முதல்வருக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் கூறுகையில், "புதுச்சேரி காலாப்பட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறோம். முன்பு 19 பேராசிரியர்கள் இருந்தநிலையில், தற்போது 6 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
பேராசிரியர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் கவுன்சில் சட்டக்கல்லூரியை ஆய்வு செய்து, பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டது. ஓராண்டைக் கடந்தும் அதை செய்யாததால் முதலாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
பல்கலைக்கழக உத்தரவை மீறி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் கல்வி கற்க இயலாத சூழல் நிலவுகிறது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
முதல்வரிடம் முறையீடு
சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி வர, அவரிடம் மாணவ, மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். “பேராசிரியர்கள் இல்லை, நூலகம் இல்லை” என்று தெரிவித்தனர். “கழிவறைகள் கூட சரியில்லை” என்று மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “சட்டக்கல்லூரியில் ரெகுலர் போஸ்ட் எடுத்தால் தாமதமாகும். யுபிஎஸ்சி முறையில் எடுக்க வேண்டும். அதனால் ஒப்பந்த அடிப்படையில் தற்போது நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது நீதிமன்றம், பல்கலைக் கழகத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. கல்லூரியை நடத்த வேண்டும். பேராசிரியர் பணியிடங்களை நியமிப்பதுடன், பிஆர்டிசி பேருந்துகளை மாணவர்களுக்கு இயக்கவுள்ளோம்.
சட்டக்கல்லூரி இருக்கும் இடம் காடு போல் இருக் கிறது. அதை சரிசெய்ய வேண்டும். மாணவர்களிடமும் அறிவுறுத்தியுள்ளேன். ஒருமாதத்தில் இவை அனைத்தும் சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.