மொத்தம் 6,580 வேட்பு மனுக்கள் தாக்கல்: இன்று பரிசீலனை

மொத்தம் 6,580 வேட்பு மனுக்கள் தாக்கல்: இன்று பரிசீலனை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிந்தது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணைய இணையதள பதிவேற்றம் அடிப்படையில் 6 ஆயிரத்து 580 வேட்பு மனுக்கள் தாக்கலாகியிருந்தன. இந்நிலையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடக்கும் பரிசீலனையின்போது, வேட்பாளர் அல்லது அவரது முகவர் பங்கேற்கலாம். இந்த தேர்தலில் வேட்புமனு பரிசீலனை நிகழ்வுகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. கடந்த தேர்தல்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்தன. இம்முறை தொகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் 2 தொகுதியிலும் அவர் இருக்க முடியாது. எனவே, ஒரு தொகுதியில் இருக்கும் அவர், மற்றொரு தொகுதி நிகழ்வுகளின் வீடியோ பதிவை பார்த்துக் கொள்வார். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்த தொகுதிக்கு அவர் செல்வார்.

பெயர், வயது, பிரமாணப்பத்திரத்தில் தவறுகள், முன்மொழிபவர் பெயர்களில் பிரச்சினை, கட்சியில் இருந்து அளிக்கப்படும் படிவம் ஏ,பி போன்றவற்றில் பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே வேட்புமனு நிராகரிக்கப்படும். இது தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் திங்கள்கிழமை 2-ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுவை வாபஸ் பெற வேண்டும். 3 மணிக்குப் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in