Published : 11 Apr 2016 04:38 PM
Last Updated : 11 Apr 2016 04:38 PM

மத்திய அமைச்சர்களை சந்திக்க மறுத்ததே இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில்

மத்திய அமைச்சர்களை சந்திக்க மறுத்ததாக திமுக தலைவர் கருணாநிதி முன்வைத்த குற்றச்சாட்டை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கடலூர், அரியலூர், பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்கள் 13 பேரை ஆதரித்து விருத்தாச்சலத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமைதி வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் தொடர்ந்து பீடுநடை போட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்த அவர் தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

கருணாநிதிக்கு கேள்வி:

கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா "மின் திட்டங்களுக்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர்களை சந்திக்க நான் ஒருபோதும் மறுத்ததில்லை. தமிழகத்தில் மின் மீட்டர்கள் இல்லாத காரணத்தால் மின் திருட்டு மின் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர்கள் தமிழகத்தில் விவசாய நிலையங்களிலும், குடிசை வீடுகளிலும் மட்டுமே மின் மீட்டர்கள் இல்லாமல் இருக்கிறது என விளக்கமளித்திருந்தனர். அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கருணாநிதி தொடர்ந்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். அப்படியென்றால் விவசாயிகள் மின் திருட்டில் ஈடுபடுவதாக கருணாநிதி கூறுகிறாரா.? இதற்கு கருணாநிதிதான் பதில் அளிக்க வேண்டும்" என்றார்.

உதய் திட்டம்: முதல்வர் விளக்கம்

மத்திய அரசின் உதய் திட்டத்தால் மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை. எனவேதான் தமிழக அரசு அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என முதல்வர் விளக்கமளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பயணளிக்காது. உதய் திட்டத்தால் தனியார் நிறுவனங்களே பயன்பெறும். மின்வாரிய கடன் களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என உதய் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களாலேயே உதய் திட்டத்தை ஏற்கவில்லை" என்றார்.

ஜெயலலிதா பிரச்சாரத்தின் சில முக்கிய துளிகள்:

* தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அரசு செய்துள்ளது.

* தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி வாழ அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

* விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

* நெய்வேலி அரிசி ஆலை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

* மீன்வள பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டு மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்தியுள்ளது.

* தானே புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் இழப்பு தடுக்கப்பட்டது.

* புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 லட்சம் வீடுகள் புதிதாக கட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது.

* தமிழகம் வளர்ச்சிப்பாதையில் விரைந்து கொண்டிருகிறது.

* வளர்ச்சியின் பலனை ஒரு குடும்பத்தினர் மட்டும் பெறாமல் ஒட்டுமொத்த தமிழகமும் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x