

துளிர்க்கும் மரக்கன்றுகள், பெரும் சவாலான கோடையை எதிர்கொள்வதற்காக பெரம்பலூர் அருகே பள்ளிக் குழந்தைகள் தன்னார்வத்துடன் முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திரத்தின் வீச்சை கோடையின் தொடக்கத்திலேயே உணர முடிகிறது. இந்த வெம்மையிலும் பெரம்பலூர் அருகே தாங்கள் வைத்த மரக்கன்றுகளைப் பேணிப் பாதுகாக்க அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முன்வந்துள்ளனர்.
பெரம்பலூரைச் சேர்ந்த கால் நடை மருத்துவரான ராஜேஷ் கண்ணா, ‘இந்தியன் உதவும் கரங்கள்’ என்ற குடையின் கீழ் தனது நண்பர்களுடன் இணைந்து, குரும்பாபாளையம் கிராமத்தைத் தத் தெடுத்து கல்வி, சுகாதாரம், இயற்கை வளம் பேணல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
அந்த வகையில் மரங்கள் அருகிப் போயிருந்த அக்கிராமத்தில், அண் மையில் 100-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டனர். மரக்கன்று களை நடுவதுடன் அவற்றைப் பேணிப் பாதுகாத்து மரமாக்கும் முயற்சியில் வித்தியாசமான நட வடிக்கைகள் சிலவற்றை ராஜேஷ் கண்ணா குழுவினர் செய்தனர்.
ஒவ்வொரு மரக்கன்றையும் ஊரில் வசிக்கும் ஆர்வலர் ஒருவரின் கையால் நடச்செய்து, அதில் அவ ரது பெயரையே குறிப்பிட்டு தனி அடையாளம் கொடுத்தனர். ஆர்வ முள்ளவர்கள் தேசத்தலைவர்கள் பெயரில் கூடுதல் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம். பருத்தியை விவசாய வாழ்வாதாரமாகக் கொண்ட வானம் பார்த்த பூமியான குரும்பாபாளையம் கிராம மக்கள், மரக்கன்றுகள் நடும் முயற்சிக்கு வரவேற்பளித்தனர்.
தங்களின் பெயர்களுடன் பிரத் யேகமாக மரக்கன்றுகளைப் பெற் றுக்கொண்டவர்களில் பெரும்பாலா னோர் பள்ளிக் குழந்தைகள். காலை யிலும் மாலையிலும் பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் குடுவையை எடுத்துச் செல்லும் இந்த பள்ளிக் குழந்தைகள், பொதுப்போக்குவரத்து குறைவான கிராமச் சாலையின் ஓரங்களில் நடப்பட்டுள்ள தங்களது மரக்கன்று களை குடுவையின் நீரால் ஈரப் படுத்துகின்றனர். அடுத்த கட்ட மாக கோடை விடுமுறையில், மரக் கன்றுகள் காயாதிருக்க புது உத்தி களைச் செயல்படுத்த குரும்பா பாளையம் குழந்தைகள் தயாராகி உள்ளனர்.
இதுகுறித்து ராஜேஷ்கண்ணா கூறும்போது,
“குழந்தைகளுக்கு பொது நலன், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என் பதற்காக தொடக்கத்தில் அவர் களது பெயரிட்டு மரக்கன்றுகளை நட்டோம். வேலையாள் ஒருவரை மாத ஊதியத்தில் அமர்த்தி செடி களுக்கு நீர்ப்பாய்ச்சத் திட்டமிட்டி ருந்தோம். ஆனால், குழந்தைகளின் ஆர்வம் அந்தத் திட்டத்துக்கே வேலையில்லாமல் போய்விட்டது.
ஊரில் உள்ள பெரியவர்களின் பெயர்களிலான மரக்கன்றுகளை விட குழந்தைகள் பெயரிலான வையே செழிப்பாக வளர்ந்துள்ளன. தற்போது கோடையின் கடுமையில் இருந்து மரக்கன்றுகளை பாது காக்க அவர்கள் தயாராகி வரு கின்றனர். அனைவரும் அறிந்த முறையில், பிளாஸ்டிக் தண்ணீர் குடுவையில் சலித்த மணலை இட்டு நீரை சொட்டுச் சொட்டாக விடுவது, செடியின் வேர் அருகே அடியில் துளையிட்ட பானை ஒன்றைப் புதைத்துவைத்து அதில் நீர் ஊற்றி மரக்கன்றுகளை வாடாது காக்க உள்ளனர் குழந்தைகள். இந்த முயற்சிகள் வெறும் மரத்தை வளர்ப்பதாக மட்டுமன்றி நல்ல மனிதர்களை வளர்ப்பதாகவும் மாறி வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே” என்றார்.