கோவில்பட்டி அருகே பஞ்சு லாரியில் தீ
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அளவந்தன்குளத்தைச் சேர்ந்தவர்மைக்கேல். இவருக்கு சொந்தமான லாரி கோவையில் இருந்து பஞ்சு ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் தக்கலைக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை ஓட்டப்பிடாரம் வட்டம்கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தசுரேஷ் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.கயத்தாறை கடந்து வரும்போது, லாரியின்பக்கவாட் டில் இரும்பு தகரம் உடைந்துள்ளது.
இதை கவனித்த ஓட்டுநர் தனது சொந்த ஊரான கே.கைலாசபுரத்தில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்புக்கு லாரியை கொண்டு சென்றார். அங்கு வெல்டிங் மூலம் லாரியின் பக்கவாட்டு தகரத்தை பொருத்தும் பணி நடந்தது. அப்போது, அதிலிருந்து வந்த தீப்பொறி பஞ்சு மீது விழுந்தது. இதில் பஞ்சு தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி முயற்சி செய்தனர். ஆனால், காற்றின் வேகத்தில் தீ மளமளவென்று லாரி முழுவதும் பரவியது.
ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்காகு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். லாரியில் இருந்த பஞ்சு முழுவதும் எரிந்து, லாரியும் முழுமையாக சேதமடைந்தது. நாரைக்கிணறு காவல் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
