

திருவண்ணாமலை: ஆரணி நகராட்சியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் சண்முகம், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
தி.மலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன் தினம் மாலை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பணம் விநியோகம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணம் விநியோகத்தை தடுக்காமல் உள்ள தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையை கண்டித்து ஆரணி நகராட்சி அலுவலகத்தை 27-வது வார்டு பாஜக வேட்பாளர் ஆர்.சண்முகம், தனது ஆதரவாளர்களுடன் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், தான் கொண்டு வந்த பாட்டிலை திறந்து, அதிலிருந்த மண்ணெண்ணெய் தனது உடலில் ஊற்றிக் கொண்டு பாஜக வேட்பாளர் சண்முகம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, பாஜக வேட்பாளர் சண்முகத்திடமிருந்த பாட்டிலை பறித்தனர். பின்னர் பாஜகவினர் புறப்பட்டு சென்றனர்.