

சென்னை: 'கோவையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று, புதிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவையைச் சேர்ந்த ஆர்.முருகேசன் மற்றும் 23-வது வார்டு அதிமுக வேட்பாளர் ரகுபதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அமைதியான கோவை மாவட்டத்தை ஆளுங்கட்சியான திமுக கலவர பூமியாக மாற்றிவிட்டது. எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளிப்படையாக பணம் பட்டுவாடாவில் ஈடுபடுகின்றனர். எனவே, ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ஏதுவாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத துணை ராணுவப் படையை பாதுகாப்புக்காக பணியமர்த்த வேண்டும்.
வாக்குப் பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் முக்கியமான இடங்கலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். கட்சி சார்பற்ற தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்று வைக்கும் வரை துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ’கரூர் மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு ஆட்கள் வந்துள்ளதனர். எனவே, துணை ராணுவப் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று கேட்டுகொண்டனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவல்துறை டிஜிபி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 29 இடங்கள் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு, 1200 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பாடமல் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
உள்துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ’உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ’ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதிய உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
முன்னதாக, ’நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள் - ரவுடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை தாக்குகின்றனர். பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் காவல்துறையும் துணை. காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது’ என்று கூறி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
"குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்" என்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். > விரிவாக வாசிக்க > ரவுடிகள், குண்டர்களுக்கு ஆதரவாக கோவை போலீஸ்: இபிஎஸ் குற்றச்சாட்டு