

சென்னை: சட்டப்பேரவையில் கேரள மாநில ஆளுநரின் உரை, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டப்போவதாக ஆளுநர் உரையில் கேரள அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
142 அடி வரை முல்லைப் பெரியாறில் தண்ணீர் தேக்குமளவிற்கு அணை வலுவாக இருப்பதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய நிலையில், அதனை ஏற்க மறுக்கும் வகையில் கேரள ஆளுநர் உரையாற்றியிருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளைக் காவுகொடுத்த திமுக முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கோட்டை விட்டுவிடக்கூடாது.
திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் நடப்பதால் முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கும் தமிழகத்தின் 124 ஆண்டு கால உரிமையை சமீபத்தில் பறிகொடுத்ததைப் போல புதிய அணை கட்டவும் அனுமதித்துவிடக்கூடாது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்" என்று தினகரன் கூறியுள்ளார்.