Published : 18 Feb 2022 02:10 PM
Last Updated : 18 Feb 2022 02:10 PM

"நீர் தேக்கப் பகுதிகளில் பிரபலங்களின் மாளிகைகள்" - முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு மீது அன்புமணி விமர்சனம்

கோப்புப் படம்

சென்னை: "முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரள பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு கேரளம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகவும், இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தப் போவதாகவும் கேரள அரசு அறிவித்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், புதிய அணை தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் பலமுறை கூறிய பிறகும், முல்லைப் பெரியாறு சிக்கலை கேரளம் மீண்டும், மீண்டும் எழுப்புவது கண்டிக்கத்தக்கது.

கேரள சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரை தொடக்கி வைத்துப் பேசிய அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான், முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதால், அதற்கு மாற்றாக புதிய அணையைக் கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து தமிழக அரசுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இன்னொருபுறம், முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டத் தேவையில்லை; மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற 2014ம் ஆண்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது முல்லைப் பெரியாற்றில் புதிய அணை என்ற கேரள அரசின் அறிவிப்பை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான எந்த தேவையும் இப்போது எழவில்லை. முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு அளித்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, 2014ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தது 5 முறையாவது அணையை ஆய்வு செய்து, அணை வலிமையாக இருப்பதாக சான்று அளித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் கூக்குரல் எழுப்புவது இரு மாநில உறவுகளை சீர்குலைத்து விடும்.

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்றும், அது குறித்து தமிழகத்துடன் பேச வேண்டும் என்றும் கேரளம் பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம், அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை தாமதிக்க வேண்டும் என்பதுதான். முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரள பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு கேரளம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேச்சு நடத்த கேரள அரசு எத்தனை முறை அழைப்பு விடுத்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது. கடந்த காலங்களில் உச்சநீதிமன்ற அறிவுரைப்படியும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் பல முறை நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுகளில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, முல்லைப்பெரியாறு சிக்கலுக்கு தீர்வு காண்பது தான் தாமதமானது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை என்ற பெயரில் தமிழக அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்; அந்தப் பேச்சு தோல்வியடைந்து விட்டால் அதைக் காரணம் காட்டி, உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர வேண்டும்; அதன் மூலம் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை தாமதப்படுத்தி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விடுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கேரள அரசின் நோக்கமாகும். கேரள அரசின் இந்த சூழ்ச்சிக்கு தமிழகம் ஒரு போதும் இரையாகக்கூடாது.

முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் முதல் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு கேரளத்தின் தரப்பில் போடப்படும் முட்டுக்கட்டைகளை தகர்த்து, பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். அதன்பின் பேபி அணையை வலுப்படுத்தும் பணியை நிறைவு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x