இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.

எக்கோ நிறுவனம் , அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக அந்நிறுவனங்களின் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமையை சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பெறவில்லை என்றும் வாதிட்டார்.

தனி நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான சட்டப்பிரிவு 14-ல் "பதிப்புரிமை" என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார். இசைப்பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு" பிரத்யேகமான உரிமையாகும் என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in