

சென்னை: ஜிஎஸ்டி, கரோனா நிவாரண நிதியை மத்திய அரசு தர மறுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவதுஉண்மைக்கு புறம்பானது. இதுமக்களை திசை திருப்பும் சந்தர்ப்பவாத அரசியல் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின், ‘‘கரோனா நேரத்தில்கூட தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.16,725 கோடிஜிஎஸ்டி நிலுவையை இழுத்தடிக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வரவேண்டிய கரோனா நிவாரண நிதி ரூ.8,989 கோடியும் தரப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்.
புள்ளிவிவரத்துடன் கூறுவாரா?
உண்மைக்கு புறம்பான தகவலை தொடர்ந்து பரப்புவது முதல்வருக்கு அழகு அல்ல. அவர் குறிப்பிட்டிருக்கும் ரூ.16,725 கோடி எதன் அடிப்படையில், எந்த மாதத்துக்கான நிலுவை என்ற முழு விவரங்களை வெளிப்படையாக புள்ளிவிவரங்களோடு வெளியிட வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கான மாநில பேரிடர் நிதி ஒதுக்கீடான ரூ.3,273 கோடியில், மத்திய அரசின் பங்கான ரூ.2,454.75 கோடியை வழங்கிவிட்ட நிலையில், தேசிய, மாநில பேரிடர் நிதியில் இருந்து மத்திய அரசு நிலுவை தொகை பாக்கியுள்ளது என்று எந்த அடிப்படையில் வலியுறுத்துகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நிலுவை தொகையை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது என்று குற்றம்சாட்டுவது மக்களை திசை திருப்பும் சந்தர்ப்பவாத அரசியல் என்பதை முதல்வர் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.