

சென்னை: முதல்வர் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஏபிவிபி மாணவர் அமைப்பு நிர்வாகிகளை சிறையில் சென்று பார்த்த அரசு மருத்துவர் சுப்பையாவை பணி இடைநீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவ அமைப்பினர் கடந்த 14-ம்தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் உள்ளஏபிவிபி நிர்வாகிகளை சென்னைராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு டாக்டர் சுப்பையா சந்தித்து பேசியுள்ளார். இது, அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், சுப்பையாவை பணி இடைநீக்கம் செய்து, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், துறை ரீதியான விசாரணை நடந்து வருவதால், மறு அறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவு பொருந்தும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள டாக்டர் சுப்பையா, 2017 முதல் 2020 வரை ஏபிவிபி-யின் தேசிய தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.