Published : 18 Feb 2022 08:47 AM
Last Updated : 18 Feb 2022 08:47 AM

சென்னையில் பிப்.28-ல் நடக்கும் ஸ்டாலினின் நூல் வெளியீட்டில் ராகுல் காந்தி பங்கேற்பு; மம்தா, அகிலேஷுக்கும் அழைப்பு

கோப்புப்படம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்28-ம் தேதி நடக்க உள்ளது. இதில்சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல் காந்திபங்கேற்கிறார். இதில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சியை 16-ம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ‘கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது’ உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘நான் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல்பாகம் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. எனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் பதிவு செய்துள்ளேன். இளமைக் காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிக் காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரையிலான பதிவுகளுடன் முதல் பாகமாக அதை எழுதியுள்ளேன். விரைவில் புத்தகக் காட்சிக்கும் அந்த நூல் விற்பனைக்கு வரும்’’ என்று கூறினார்.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்28-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தேசிய தலைவர் ராகுல் காந்திசிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். அத்துடன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x