

சென்னை: அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு தேவையின்றி கரோனா பரிசோதனை மேற்கொள்ளக் கூடாதுஎன்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம்அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தற்போது நிலவிவரும் கரோனாசூழலை கருத்தில் கொண்டு பரிசோதனைக்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது. அதன்படி, காய்ச்சல், சளி, தொண்டை வலி, சுவை மற்றும் வாசனையின்மை போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்.
முதியவர்களுக்கு சோதனை
அதேநேரம், கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கும் பரிசோதனை செய்வதுஅவசியம். குறிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றஇணை நோய்கள் உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். இதைத் தவிர, தேவையின்றி வேறு யாருக்கும் பரிசோதனை செய்யக் கூடாது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமேமாதிரிகளை சேகரிக்க வேண்டும்.கரோனா பரிசோதனைகளை யாருக்கு மேற்கொள்ள வேண்டும்என்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக 1,252 பேருக்கு கரோனா
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று 740 ஆண்கள், 512 பெண்கள் என 1,252 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 285, கோவையில் 214 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 41,783 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 33 லட்சத்து 80,049 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4,768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகம் முழுவதும் 23,772 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 9,052 பேர் இறந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.