

திருப்பத்தூர்: ‘‘இபிஎஸ், ஓபிஎஸ் அரசியல் சாசனத்தை படித்து பார்க்க வேண்டும்’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தெருக்களில் உள்ள பிரச்சினைகளை மோடி, ஸ்டாலினிடத்தில் சொல்ல முடியுமா? அதற்காகத்தான் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2லட்சம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள்தான் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பர்.
இது மத்திய, மாநில அரசுகளை மாற்றக் கூடிய தேர்தல் கிடையாது. நம்முடைய அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தேர்தல். திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்றுவர். மாற்றுக் கட்சியினர் வந்தால் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாட்டார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை முடக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. இபிஎஸ், ஓபிஎஸ் அரசியல் சாசனத்தை படித்து பார்க்க வேண்டும். 5 ஆண்டுகள் திமுக ஆட்சி இருக்கும். மேலும் பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து நிதி ஆதாரங்களைப் பொறுத்து மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசனத்திலேயே இல்லை. இது விஷமத்தனமான கருத்து. ஒரே நாடு, ஒரு மொழி இந்தி, ஒரே நாடு ஒரே மதம் இந்து என்பார்கள். அதேபோல் ஒரே கட்சி, ஒரே பிரதமர் மோடி என்பார்கள். பாஜக தமிழ் இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் நேர் விரோதமானது என்று பேசினார். இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.