Published : 18 Feb 2022 09:15 AM
Last Updated : 18 Feb 2022 09:15 AM

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடிஊழல் நடந்துள்ளது” என்று தேர்தல்பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் நேற்றுஅவர் பேசியதாவது:

கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொய் சொல்கிறார். திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்13 பேர், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை,மகன் கொலை குறித்து பழனிசாமிக்கு நினைவுபடுத்துகிறேன். பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது யார்?

கோடநாடு கொலை, கொள்ளைகள் ஹாலிவுட் சினிமாக்களை மிஞ்சும் அளவுக்கு நடந்தன. ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை முடக்கி வைத்தது யார்?. ஆணையத்தின் விசாரணை தற்போது தொடங்கவுள்ளது. அதில் உண்மைகள் வெளிவரும்.

திமுக ஆட்சிக்கு வந்தபோது நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிகமாக இருந்த நிலையில், விலையை குறைத்து நாட்டுக்கே முன்மாதிரி காட்டியிருந்தோம். 13 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் உண்மையான பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் நகைக் கடன் முறைகேடுகள் ஏராளம். பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தில் இதுவரை 76.64 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட ரூ.1,226கோடி இழப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். திட்டங்களைஅறிவித்துவிட்டு கோட்டையிலேயே இருப்பதில்லை. திட்டங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறேன்.

10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் செய்யாததை, கடந்த 9 மாத திமுக ஆட்சியில் செய்துள்ளோம். 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தின் மீதான கடன் ரூ.1 லட்சம் கோடி. ஆனால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த கடன் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தமிழக வரலாற்றில் கருப்பு பக்கங்களாக அதிமுக ஆட்சி இருந்தது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x