Published : 18 Feb 2022 07:17 AM
Last Updated : 18 Feb 2022 07:17 AM
மற்ற மாவட்டங்களைவிடவும் கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தொடக்கம் முதலே பரபரப்பாக காணப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், ஓர் இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. ஒரே ஒரு வார்டு மட்டும் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளரும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்.
திமுக 76 இடங்களில் நேரடியாக களம் காண்கிறது. எஞ்சியுள்ள 24 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்டன. இதில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்ற வேண்டுமென அதிமுக, திமுக என இருகட்சியினருமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெம்பாக களம் இறங்கியது அதிமுக. வேட்பாளர்களை அறிவிக்கவும், எந்த வார்டை யாருக்கு ஒதுக்குவது என தீர்மானிக்கவும் திமுக கூட்டணியில் இழுபறி நீடித்துவந்தபோது, கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையே அதிமுக வெளியிட்டுவிட்டது. கடைசிநேரத்தில்தான் திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிலும்,கூட்டணிக்கு சில வார்டுகளை ஒதுக்கியதற்கு திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலர் சுயேச்சையாக தங்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கினர்.
மாநகராட்சியில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சிக்காக உழைத்த திமுகமகளிர் அணி நிர்வாகிகளுக்கு வாய்ப்புவழங்கப்படவில்லை என வெளிப்படையாகவே மகளிர் அணியினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை ஒரு சில வாக்குகளும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பதால், இவையெல்லாம் திமுகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மாநகராட்சி வார்டுகளில் 97 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகதனித்து போட்டியிடுவதால், சிறுபான்மையினர் வாக்குகள் தங்களிடமிருந்து விலகிச் செல்வது தவிர்க்கப் பட்டுள்ளது என அதிமுகவினர் கருது கின்றனர்.
அதிமுகவைப் பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோவையில் கோலோச்சி வருகிறது.இந்தமுறையும் கோவை தங்கள் வசமாகும் என உற்சாகம் குறையாமல் அவர்கள் பணியாற்றினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அக்கட்சியில் பெரிய குழப்பங்கள் ஏதும் இல்லை. முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவர்களே பெரும்பாலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். எனவே, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபிறகு அவர்களுக்கு எதிராகவோ, மாற்றக் கோரியோ எங்கும் பெரிதாக எதிர்ப்பு இல்லை. இதை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமான அம்சமாக கருதுகின்றனர்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என செய்த பணிகளை முன்வைத்து அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். போட்டியிடும் இடங்களில் 51இடங்களையாவது கைப்பற்ற வேண்டும் என்பதால், அனைத்து வார்டுகளிலும் நேரடியாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அதிமுகவுக்கு மற்றுமொரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
கோவையில் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்தவும் கரூரைச் சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுகதலைமை நியமித்தது. தேர்தல் பணிக்காக வேறு மாவட்ட திமுகவினர் இவ்வளவு பேர் இங்கு வந்து அதிகாரத்துடன் பணியாற்றியது எங்களுக்கே புதிதான ஒன்று என்கின்றனர், திமுகவினர்.
இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. நிறைவேற்றிய, நிறைவேற்றப்போகும் திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்காமல் ஹாட்பாக்ஸ், கொலுசு போன்றவற்றை வாக்காளர்களுக்கு திமுகவினர் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது எந்த அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் எடுபடும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பெண்களின் வாக்குகள் யாருக்கு?
தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதே பிரச்சாரத்தின்போது அதிமுக தலைவர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. அவர்கள் பேசும்போது, “தரமில்லாத பொங்கல் பரிசுத் தொகுப்பை திமுகவினர் வழங்கினர். அதில் ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.2,500 ரொக்கப் பணத்தோடு தரமான பொருட்களை வழங்கினோம்” என்று தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தை பொருத்தவரை பெண்களின் வாக்குகளை கடந்த காலங்களில் அதிமுக அறுவடை செய்து வந்தது. சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் பெண்களை குறிவைத்தே அதிக அளவிலான வாக்குறுதிகளை இருகட்சிகளும் அறிவித்தன. இதில், திமுக மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றை அறிவித்தது. இதில், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வாக்காளர்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எனவே, பெண்களின் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT