சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் ரூ.5,000 அபராதம்: வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்

சுவர்களில் போஸ்டர் ஒட்டினால் ரூ.5,000 அபராதம்: வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை, 3-ம் கட்டமாக கணினி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 45 பறக்கும் படைக் குழுக்களின் வாகனங்களை, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி அரசு மற்றும் பொது கட்டிடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், மாநகராட்சிப் பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் துண்டுப் பிரசுரம் அச்சடிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பொது கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவதும், விளம்பரங்கள் எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வரையப்பட்டிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பறக்கும் படைகள் மூலம் ரூ.1.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களே அவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த வேட்பாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த செலவுத் தொகை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பதற்றமான 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

தேர்தல் பார்வையாளர்கள் வி.தட்சிணாமூர்த்தி, ஏ.ஜான் லூயிஸ், டாக்டர் டி.மணிகண்டன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஜெ.விஜயாராணி, விஷு மஹாஜன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in