

காஞ்சிபுரம்: அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் நடைபெறும் முதல் மேயர் பதவியை கைப்பற்றுவது யார் என்பது தொடர்பாக திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் உற்சாகத்துடன் களப் பணி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் பட்டுக்குப் பெயர் பெற்ற ஊர், கோயில் நகரம் என்றும் கூறப்படுகிறது. பெரு நகராட்சியாக இருந்த காஞ்சிபுரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலைச் சந்திக்கிறது.
மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 50-ல் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 36-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதால் அந்த ஒரு வார்டில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாநகராட்சியில் 327 பேர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் இந்த மாநகராட்சி காணப்படுகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாமலேயே உள்ளது. சாயப்பட்டறை கழிவுகளும் பெரும் பிரச்சினையாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என 3 ஆறுகள் ஓடியும் குடிநீருக்கு பல்வேறு இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி என்பதால் திமுக - அதிமுக இடையே இப்பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. இக்கட்சிகள் தவிர்த்து பாமக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைக் குறை கூறியும், திமுக அரசின் சாதனைகளைக் கூறியும் திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த மாநகராட்சியில் மேயர் பதவி பெண்களில் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வைத்துள்ளனர்.
திமுகவில் மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா 18-வது வார்டில் போட்டியிடுகிறார். காஞ்சிபுரம் நகர செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா 17-வது வார்டில் களம் இறங்கியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ உலகரட்சகன் மகன் ஷோபன் குமாரின் மனைவி டாக்டர் சூர்யா 8-வது வார்டில் போட்டியிடுகிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி 9-வது வார்டில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள், மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க கட்சியின் மாவட்டச் செயலர் க.சுந்தர், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக தலைமையை இப்போதே நாடி வருகின்றனர்.
அதிமுக சார்பில் 7-வது வார்டில் போட்டியிடும் சுசிலா, 35-வது வார்டில் போட்டியிடும் சுபாஷினி உள்ளிட்டோர் அதிமுக தலைமையிடம் மேயர் பதவிக்கான வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.
மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27 வார்டு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க முடியும்.