Published : 18 Feb 2022 08:01 AM
Last Updated : 18 Feb 2022 08:01 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மதிமுக தலைமைக் கழகச் செயலர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி 35-வது வார்டு மதிமுக வேட்பாளர் எஸ்.ஜீவனை ஆதரித்து, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் நேற்று துரை வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள பவானி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த துரை வைகோ, தொடர்ந்து வாகனத்திலும், நடந்தும் சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வலதுசாரி சிந்தனையுடன் பாஜக அரசியல் செய்து வருகிறது. அதற்கு அதிமுகவும் துணை நின்றது. மாணவி லாவண்யா விவகாரம் போன்ற பிரச்சினைகளை தேர்தல் நேரத்தில்தான் பாஜகவினர் எழுப்புகின்றனர். மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவுக்கும், அக்கட்சிக்கு துணை நிற்கும் அதிமுகவுக்கும் இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புட்டுவார்கள்.
தமிழகத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பிரச்சாரத்தின்போது, பெரம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT