

சென்னை: தேர்தல் விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு, மற்ற வாக்குச்சாவடிகளில் குண்டர்கள் மூலம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட சிலர் திட்மிட்டிருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.
இதை முழுமையாக தடுத்து நிறுத்தி, ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்றுநான்புகார் கொடுத்து இருக்கிறேன்.
தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே சோதனை நடத்தி, முறையான அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
அதேபோல, 100 மீட்டருக்குள் வாகனங்கள் நிறுத்துவது, கும்பல்கூடுவது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. அந்தந்த பகுதியைச் சேர்ந்தவரை மட்டுமே தேர்தல் முகவராக நியமிக்க வேண்டும். வேறு நபர்களை நியமிக்கக் கூடாது.இதை போலீஸார் சோதனை செய்து, உறுதி செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் 2006-ம் ஆண்டில் 89 வார்டுகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம்கூட அப்போது கண்டனம் தெரிவித்தது.
எனவே, காவல் துறை மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து முறையான தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.