

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அரசியல் கட்சிகளிடம் வழங்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், பாஜக மாநிலப் பொதுச் செயலர் கரு.நாகராஜன் நேற்று மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடுதல் பாதுகாப்பு அவசியம்
வாக்குப்பதிவை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.
வாக்குப்பதிவு தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா சிகிச்சையில் இருப்போர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே, கரோனா சிகிச்சை பெற்று வரும் வாக்காளர்கள் பட்டியல் உள்ளதா என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். அதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அப்போதுதான் முறைகேடாக வாக்குபதிவு நடைபெறுவது முழுமையாக தடுக்க முடியும்.
எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தேர்தல்ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ், சென்னை மாநகர தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உடனிருந்தனர்.