Published : 18 Feb 2022 06:41 AM
Last Updated : 18 Feb 2022 06:41 AM

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகம் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளது: கடலூரில் திருமாவளவன் எம்பி பிரச்சாரம்

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகம் தலை சிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளதாக திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

கடலூர் மாநகராட்சி பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகம் தலை சிறந்த வளர்ச்சி மிகுந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவின் தலை சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றுசர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக அமைத்தது. அதே கூட்டணி தான் உள்ளாட்சித் தேர்தலிலும் அமைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்த கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் சிதறிப் போனது.

இதற்கு காரணம் அதிமுக கூட்டணியில் நல்ல தலைமை இல்லை. அதிமுகவிற்கும் தலைவர்கள் இல்லை. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவிற்கு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆளே இல்லை. கட்சித் தலைவரும், பொதுச் செயலாளரும் அவர்களால் அமைக்க முடியவில்லை.அதிமுகவிற்கு நல்ல ஆற்றல் மிக்க தலைவர் இல்லை என்றால் கூட்டணிக்கு எப்படி நல்ல தலைமை வரும்.

திமுகவிற்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவிற்கு இல்லை. இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மதவெறி சக்திகள் ஊடுருவ நினைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ், சங்க்பரிவார் அமைப்புகள் மூலம் மறைமுகமாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழகத்தில் ஊடுருவ நினைக்கிறார்கள்.

இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அவர்களால் ஆளுமை செலுத்த முடிகிறது. ஆனால் தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை. காரணம் அவர்கள் வாலாட்டினால், வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சி மற்றும் திமுக கூட்டணி இங்கு உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், அது அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது கைப்பாவையின் ஆட்சியாகத்தான் இருக்கும். ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்தி வந்தது பாஜகதான். அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் பாஜக கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தனர்.தமிழகம் முன்னேற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x