

கவுரவப் பிரச்சினையாகிவிட்டதால் திருமங்கலம் நகராட்சியை கைப் பற்றுவதில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.
திருமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் திமுக 23-லும் கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
அதிமுக 27 வார்டுகளிலும் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக 25, அமமுக 16, தேமுதிக 5, நாம் தமிழர் கட்சி 8 வார்டுகளில் போட்டியிடுகின்றன. சுயேச்சைகள், போட்டி வேட்பாளர்களும் பல வார்டுகளில் நிற்கின்றனர்.
நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக சார்பில் நகர் செயலாளர் முருகனின் மருமகள் சர்மிளா, அதிமுக சார்பில் நகர் செயலாளர் விஜயனின் மனைவி உமா ஆகியோர் போட்டியில் உள்ளனர். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி வென் றால் மட்டுமே நகரம் வளர்ச்சி பெறும் என்பதை குறிப்பிட்டு திமுக பிரச்சாரம் செய்தது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறி மக்களிடம் வாக்குக் கேட்டார். உமா ஏற்கெனவே நகராட்சித் தலைவராக இருந்தவர். புதிய பேருந்து நிலையம், விமான நிலையச் சாலையில் ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை, 24 மணி நேர குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை திருமங்கலம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திமுக நகர் செயலாளர் முருகனுக்கு கட்சியிலும், உறவு முறையிலும் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இருந்தபோதிலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பணியாற்றவில்லை என்றும் சில உறவினர்கள் மாற்றுக் கட்சியில் உள்ளதும் பலவீனமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் கூட்டணிக் கட்சியினர், சமூக வாக்குகள் தனக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகிறார். முருகன், விஜயன் ஆகியோரிடையே வெற்றி பெறுவது பெரும் கவுரவ பிரச்சினையாகிவிட்டதால் போட்டி மிகக் கடுமையாக உள்ளது.