

பிற கட்சிகளை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 110 தொகுதிகளை பகிர்ந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும்.
தேமுதிகவில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் விலகி திமுகவில் இணைகின்றனர். பிற கட்சிகளை உடைக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவது அக்கட்சிக்குதான் அவப்பெயர்.
திமுக, தேமுதிகவில் உள்ள சில பலவீனமான நபர்களை தங்கள் கட்சியில் சேர்க்கிறது. அதனால் தேமுதிகவை அழித்துவிட முடியாது.திமுக தொடர்ந்து பிற கட்சிகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவது புதிதல்ல.''
இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.