

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2011 ம் ஆண்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி எஸ்.பி கன்னியப்பன் வழக்கு பதிவு செய்தார்.
இவ்வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ் வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திரமாநில பத்திரப்பதிவு பதிவாளர், வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர்.
இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில் அரசு தரப்பில் மாநில அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (திங்கள்கிழமை) கூறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்முடி ஆஜரானார். போதுமான ஆதாரங்களை அரசுதரப்பு நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை நீதிபதி சுந்தரமூர்த்தி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நிருபர்களிடம் பொன்முடி கூறும்போது, "அரசியலில் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பொய்வழக்கு என இந்த தீர்ப்பு நிருபித்துள்ளது" என்றார்.