

திருச்செந்தூரில் கடற்கரைக்கும், பாளையங்கோட்டையில் தினசரி சந்தைக்கும் அதிகாலையில் நடந்து வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாதாரணமாக மக்களை சந்தித்து உரையாடினார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங் களில் கடந்த 24-ம் தேதி முதல் நேற்றுவரை 3 நாட்கள் மாலையில் தொடங்கி இரவு 10 மணி வரை வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். 24-ம் தேதி இரவு நாங்குநேரியில் பிரச்சாரத்தை முடித்த அவர், திருச்செந்தூரில் இரவு தங்கினார். 25-ம் தேதி அதிகாலையில் அவர் திருச்செந்தூர் கடற்கரைக்கு நடந்து சென்றார்.
அங்கு கட்சியினர் யாருமின்றி பாதுகாவலர்களுடன் வந்த அவர், கடல் நீராட வந்த மக்களை சந்தித்து பேசினார். திகைத்து ப்போன பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண் டனர். செல்பி எடுக்க ஆர்வம் காட்டியவர்களுக்கு ஸ்டாலின் தடையேதும் சொல்லவில்லை. அவர்களுடன் கை குலுக்கி திமுக வுக்கு ஆதரவு கேட்டார். மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
அன்று இரவு தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்த அவர், பாளையங்கோட்டையில் தங்கி னார். நேற்று அதிகாலை அங்குள்ள தினசரி சந்தை பகுதி யில் நடந்து சென்று, பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்தார். திமுக தேர்தல் அறிக்கையை விளக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். வியாபாரிகள் தங்களுடைய பிரச்சினைகளை அவரிடம் கூறினர்.
அங்குள்ள கடையில் டீ குடித் தார். மு.க.ஸ்டாலினுடன் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர். ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்த திமுகவினரும், பொதுமக்களும் திரண்டு வந்தனர். கட்சியினர் யாருமின்றி, தனியாக வந்து மு.க.ஸ்டாலின் உரையாடியது பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் வியப்பை அளித்தது.