Published : 18 Feb 2022 07:11 AM
Last Updated : 18 Feb 2022 07:11 AM

திராவிட இயக்க வரலாற்றில் முத்திரை பதித்த நெல்லை: தேர்தல் பிரச்சாரத்தில் மு.க. ஸ்டாலின் புகழாரம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமின்றி திராவிட இயக்க வரலாற்றிலும் திருநெல்வேலி சீமை முத்திரை பதித்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் அவர் பேசியதாவது:

இந்திய விடுதலை போராட்டத்துக்காக தமிழ்மண்ணில் போராடிய பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், அழகுமுத்துக்கோன், பாரதியார், வ.உ.சி. போன்ற எண்ணற்ற வீரர்களை திருநெல்வேலி மண் தந்துள்ளது. திராவிட இயக்க வரலாற்றிலும் திருநெல்வேலி சீமை முத்திரை பதித்துள்ளது.

வ.உ.சி., வேலுநாச்சியார் உருவங்கள் கொண்ட அலங்கார ஊர்திக்கு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்தர மறுத்தனர். இந்த ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் வலம்வந்து மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டது.

அறிஞர் அண்ணா 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது திருநெல்வேலியில் ஒருவாரம் தங்கியிருந்து மக்கள் மத்தியில் மொழியுணர்வை தட்டி எழுப்பினார். 1965-ல் மொழி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டார். திமுகவில் இளைஞரணி செயலாளராக நான் இருந்தபோது 2007-ல்திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட்டிருந்தது. திமுக ஆட்சியின்போது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு திருப்பணிகள்செய்யப்பட்டன. திருநெல்வேலியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைத்துஅதற்கு திருவள்ளுவர் பெயரை கருணாநிதி சூட்டினார். திருநெல்வேலியிலுள்ள செல்லப்பாண்டியன் மேம்பாலமும் திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. இதுபோல் திமுக ஆட்சியில் திருநெல்வேலியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x