

திருச்சியில் விவசாய சங்கங்களின் கூட்டியக்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்கள், நகைக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கூட்டியக்கத் தலைவர் தெய்வசி காமணி சிறப்புரையாற்றினார். பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டியக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டியக்க அவைத் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, “பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் தேர்தலில் விவசாயிகள் வாக்களிக்கக் கூடாது என்றும், குறிப்பாக, அதிமுகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சம் இடம்பெற்றிருக்கும்பட்சத்தில் மட்டும், திமுக அல்லது மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றில் தாங்கள் விரும்பும் கூட்டணிக்கு விவசாயிகள் வாக்களிப்பது. திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சம் இல்லையெனில் விவசாயிகள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.