

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதற்கான விண்ணப்பத்தை திமுகவினர் வழங்கியதாக கூறி சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் அதிமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 9 மாதங்கள் கடந்தும், குடும்ப தலைவிக்கு மாதாந்திர உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இதன்தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் எதிரொலிக்கும் என உளவுத்துறை மூலம், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, குடும்ப தலைவிக்கான மாதாந்திர உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என தனது பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென கூறி வருகிறார்.
அவரது அறிவிப்புக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில், குடும்ப தலைவிக்கு மாதாந்திர உரிமைத் தொகை பெறுவதற்கான படிவத்தை வழங்கி வருவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று தீவிரமாக நடைபெற்றது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
அப்போது, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள், படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மாதாந்திர தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
இதுபற்றி தகவலறிந்த அதிமுகவினர், திமுகவினர் விண்ணப்பம் வழங்கியதை கண்டித்தும், தேர்தல் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரபாபு, துணை காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவினர் விண்ணப்பம் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அதிமுகவினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தததால், சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் 40 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.