மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: திண்டுக்கல் கல்லூரி தாளாளர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: திண்டுக்கல் கல்லூரி தாளாளர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on
1 min read

மதுரை: பாலியல் வழக்கில் திண்டுக்கல் கல்லூரி தாளாளருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் மீது நர்சிங் கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகனை கைது செய்தனர். கைதான ஒரு வாரத்தில் ஜோதி முருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களையும் ஓர் எதிர்மனுதாராக சேர்க்கக் கோரி அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. பெண்கள் கூட்டமைப்பின் வழக்கறிஞர் வாதிடுகையில், ’மனுதாரர் ஜாமீனி்ல் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியை விட கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாக பென்டிரைவ் உள்ளது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

பின்னர் நீதிபதி, அந்த பென்டிரைவ் விசாரணை அதிகாரியிடம் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்கள் கூட்டமைப்பு சார்பில், விசாரணை அதிகாரியிடமும் அந்த ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in