

2007 தொகுதி மறுசீரமைப்பில் உருவான புதிய தொகுதி கோவை தெற்கு. கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் சேலஞ்சர் துரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரிடம் சுமார் 27 ஆயிரத்து 796 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
கோவை மாவட்டத்துக்கு மட்டுமல்ல, கோவை மாநகரத்திற்கே இதயமாக உள்ள தொகுதி இது. முழுக்க நகரப் பகுதி என்பதால் பலதரப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்கள், இந்துக்கள், வட மாநிலத்தவர்கள், அதிகம். படித்தவர்கள் மிக அதிகம் என்பதால் ஆட்சியாளருக்கு எதிரான கருத்துகள் அதிகம் தென்படுவது இந்த தொகுதியில்தான். அதன் எதிரொலி, இதன் சிட்டிங் எம்எல்ஏவுக்கு கொடுக்காமல் கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ள அம்மன் அர்ச்சுனனுக்கு ‘சீட்’ வழங்கியுள்ளது அதிமுக. ‘படித்த எதிர்க்கட்சி வேட்பாளர்களை எதிர்கொள்வது கடினம், கோவையில் அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் மதுபான பார்கள், லாரிகளில் மண் அள்ளும் ஒப்பந்தங்களில் வளம் சேர்த்தது, கட்சிக்காரர்களின் வருவாய்க்கே குந்தகம்’ என்றெல்லாம் கூறி, கார்டன் வரை கட்சிக்குள்ளேயே தொடர் புகார்கள் பறக்கின்றன.
அதேசமயம், தொகுதிக்குள் அடிக்கடி பழுதடையும் பாதாளச் சாக்கடை குழாய்கள், சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குடிநீர் பிரச்சினை, காந்திபுரம் பாலம் உருவாகிக் கொண்டிருப்பதால் மேலும் சிக்கலாகி கிடக்கும் போக்குவரத்து நெரிசல் என வரும் மக்கள் பிரச்சினைகளிலும் இவர் நீந்திக் கடக்க வேண்டி உள்ளது.
இதையெல்லாம் உத்தேசித்துதான், நமக்கு ‘சீ்ட்’ கிடைத்தால் சுலபமாக இந்த தொகுதியை வெல்லலாம் என்று கணக்குப்போட்டு காத்திருந்தனர் திமுகவினர். ஆனால், அவர்களே எதிர்பாராத வகையில், தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்து விட்டது திமுக தலைமை. காங்கிரஸிலும் சிதம்பரம் அணியில் முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமிக்கே ‘சீட்’ என்றே கடைசி வரை பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மயூரா ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டார். இவர் கடைசி நேரத்தில் ‘சீட்’ பெற்றதை இன்னமும் அலசி ஆராய்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.
இவர் ஆரம்பத்தில் வாசன் கோஷ்டியில் இருந்தார், பின்னர் ப.சிதம்பரம் கோஷ்டிக்கு சென்றார். பிறகு பிரபு அணியில் புகுந்தார்.
இவர் ஆரம்பத்தில் வாசன் கோஷ்டியில் இருந்தார், பின்னர் ப.சிதம்பரம் கோஷ்டிக்கு சென்றார். பிறகு பிரபு அணியில் புகுந்தார்.
ஆக, காங்கிரஸில் ஒலிக்கும் கோஷ்டி பாதகம், திமுக நிர்வாகிகளிடம் காணப்படும் சீட் கிடைக்காத ஆற்றாமை இவருக்கு சரிவை தரலாம்.
மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி பத்மநாபன் நிற்கிறார். தொழிலாளர், மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டது, 3 முறை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தது. இவருக்கு தொகுதியில் நல்ல அறிமுகத்தை கொடுத்திருக்கிறது. அது பெரும்பான்மை வாக்குகளாக மாறுமா என்பது போகப்போக இந்த வேட்பாளரின் கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம், காம்ரேட்களின் பிரச்சார உத்திகளின் மூலமே தெரியவரும்.
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கட்சியின் மாநிலச் செயலாளர் என்பதால் மீடியா வெளிச்சம் நன்றாகவே கிடைத்துள்ளது. ஆனால், அது வாக்காக மாறும் வகையில் தொகுதி மக்களிடம் பிரபலமாகவில்லை என்பது தொகுதியை சுற்றி வரும்போது அறிந்து கொள்ள முடிகிறது.