Published : 17 Feb 2022 05:11 PM
Last Updated : 17 Feb 2022 05:11 PM

பணக்காரர்கள் அடகு வைப்பார்களா? - நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

தேனி: "திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளும் பொய். அதாவது 505 பொய், இந்த பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மக்களை நம்பவைத்தனர். ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியது, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி மாவட்டம் அல்லிநகரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: "திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகள், அனைத்தும் பொய். அதாவது 505 பொய், இந்தப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி மக்களை நம்பவைத்தனர். ஒரு சின்ன சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்தது.

ஆட்சிக்கு வந்த திமுகவினர், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினார்களா என்றால், இல்லை. ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்களே... கொடுத்தார்களா? 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தனர், தள்ளுபடி செய்தார்களா..? இல்லை.

இந்தத் தேர்தல் முடிந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுகவினரின் பேச்சைக் கேட்டு 50 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துவிட்டனர். தற்போது என்னவென்றால், நகைக்கடன் தள்ளுபடிக்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என கணக்கு எடுக்கிறார்களாம். யாராவது பணக்காரர்கள் சென்று நகைகளை வங்கியில் அடகு வைப்பார்களா? நகைகளை அடகு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஏழைகள்" என்று ஓபிஎஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x