

சென்னை: தமிழக காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதியில் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட LGBTQIA சமூகத்தினரை தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என்ற புதிய சட்டத்திருத்தம் அரசிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் நட்பாக பழகத் தொடங்கினர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினர். இதற்கு இருவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களைப் பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு தப்பிவந்தனர். பின்னர் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடி, அதன் பின்னர் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகளில் 24c சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என LGBTQIA பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு கீழ் பணிபுரியும் காவல்துறையினர் தேவையில்லாமல் காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது என்ற பிரிவைச் சேர்த்துள்ளனர்.
மேலும், காவல் துறையினர் சட்டபூர்வமான முறையில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக உள்துறைச் அரசிதழிலும் வெளியிடபட்டுள்ளது. விசாரணையின் போது இந்த விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்காக போராடுபவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது: இவர்கள் மட்டுமின்றி இவர்களுக்காக போராடும் அமைப்பைச் சார்ந்தவர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது என இந்த சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் உள்ளிட்டோர் சாதாரணமாகவே காவல்துறையினரால் தவறாக நடத்தப்படுவதாகவும், அது தொடர்பான பல்வேறு புகார்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களை காவல்துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.